வானிலேயே என் உறக்கம்.
ஆதாரம் ஏதுமற்ற தள்ளாட்டம்.
உணர்வு மரத்த சிந்தனைகள்.
பிடிமானம் தளர்ந்த நடைகூட
அலைபோலத் தள்ளாடி
காற்றடித்த திசையில்
கால்கள் நடைபோட
மனம் எதிர்த்திசையிலேயே
போராடியபடி.
முள் மீது படுக்கை போட்டவன் நீ.
இரத்தம் வருகிறதா என்பது போல்
ஒரு பார்வை.
உருகி ஆவியாகிய எனக்குள்
கண்ணீரின் ஈரமாய் நீ.
எலி பிடித்து
விளையாடும் பூனைக்குத்
தெரியாத வலி எனக்குள்.
ஆழக்கிணற்றின்
அடியில் வாழும் நீர்ப்பாசிபோல
ஆசைகள்
அமீபாக்களாய் பங்கசுக்களாய்.
உன்னோடு இணைந்து பறக்க
இறக்கைகள் கேட்க
இருந்ததையும் பிய்த்துப்
பிடுங்கி எறிந்துவிட்டு,
இன்னும் எங்காவது ஒட்டிக் கிடக்கிறதா
என்று பரீட்சித்துப் பார்க்கும்
இராட்சதக் காதலனாய்.
இனிமை கொடுமையாய் மாறிய
விந்தைதான் எப்படி!
காலம் எதுவித சைகையுமே
இல்லாமல்
நீயும் எட்டாத் தூரத்திலேயே.
சேர்ந்திருக்கும்
தருணங்கள் கிடைக்காமலேயே
பிரிவின்
தருணங்கள் மிகச் சுலபமாய் அருகில்.
இன்று ஒரு பெருமூச்சின்
நெருப்புச் சுவாசத்திற்குள்
நீர்த்தும் நீறாமல்
நடைப்பிணமாய் நான்!!!