ஒரு கோடு !
அதில் ஒரு வளைவு !
அதற்குள் ஒரு புள்ளி நீ !
இதற்குள் நான் எங்கே !
என் மௌனங்களைத்
தேக்கி வைத்திருந்தேன்.
அத்தனையும் உடைத்தெறிகிறது
உன் பெயர்.
யாரோ உன்னை அழைக்க
நானல்லவா திரும்பிப்பார்க்கிறேன் !
தடுமாறும் மனதின்
தகறாறு நீ.
எங்கே என் காதலைப்
பார்த்து விடுவாயோ
பயத்திலே மறைக்கிறேன்
என் கண்களை !
மௌனங்கள்
மொழி உடைத்துக்
காத்திருக்கின்றன.
நீ...
விட்டுப் போன
வார்த்தைகளோடு !
நகர மறுக்கிறது
நிமிடங்களும் நொடிகளும்.
நீ வரும் வரை
என்னோடு விரதமாம் அவைகளும்.
வந்துவிடு !
நீ ...
தராமலேயே போனாயோ
தந்து வராமல் போனதோ
உன் முத்தங்கள்
எனக்குக் கிடைக்கவே இல்லை !
சுற்றிச் சுழன்று
திரும்பியும் விழுகிறேன்
உன் நினைவுக் குழிக்குள்.
என் புதைகுழியாகவும்
அமையலாம் அது !
கூட்டுக்குள்ளும் அடைத்து
கதவையும்
திறந்து விட்டிருக்கிறாய்.
உன்னைத் தாண்ட முடியாத
சுதந்திரம்.
எனக்கு ஏன் !
நனைந்த தலயணையை
உலர்த்தி எடுத்துப்
பரவி விடுகிறேன்
படுக்கை முழுதும் நீ.
கைகளோடு
இறுக்கிக்கொள் என்கிறேன்.
மறுபடியும்
உயிர்த்தெழுந்து
மடி சாய்த்துக்கொள்கிறாய்
உணர்வோடு !
உயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு
என்னைக் கொல்ல உன்னால்
மட்டுமே முடியும்.
உயிர்ப்பித்தாய்
உயிரையும் எடுக்கிறாய்.
பத்து நாள்தானே
பட்ட மரம் தளிர்க்காது நம்பு.
கல்லாய்த்தான் இருந்தேன்
கரைத்தது உன் அன்பு.
கண்ணீரின் சாரல் எங்கும்
அன்பே...போய்விடு
யாரும் பார்க்கமுன் !!!