தோழா...
எமக்கான தேவைகளை
சமாதானத்திற்கான வார்த்தைகளை
எமக்காகப் பேசி
பார்வைகளால் விதை தூவி
பயிரிட்டவன் நீ
எங்கே நீ !
கொஞ்ச நாட்களாக நீயின்றி
பரிதவித்து நீரின்றி வறண்டு
வரப்புகளில் ஆடும் மாடுமாய்
நத்தைககளும் ஊர
களைகளுக்குள்
அகப்பட்டுக் கிடக்கிறோம்
தோழா எங்கே நீ!
என் அம்மா சொன்னா
பாட்டி சொன்னா
பாலுக்கு அழுதேனாம்
பட்டுப் பாவாடைக்க்கும் அழுதேனாம்
உனக்கும் அதுபோலவே
ஆசைகள் இருந்திருக்குமே !
என்றாலும் தீராத வெறியோடு
எமக்கான பாதைகளைச் சீர் திருத்தி
இடைவெளிகளை நிரப்பிச் செப்பனிட்டு
ஒற்றைச் சீருடையோடு மட்டும்
கல்லறைத் தோழர்களோடு
உன் உணர்வுகளைப்
பகிர்ந்து கொண்டிருந்தாயே
இப்போ கொஞ்ச நாளாய்க் காணோமே
எங்கே நீ !
முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.
இப்போ பலநாட்கள் ஆகியும்
பதுங்கு குழிகள் மூடப்பட்டும்
விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ !
அந்தரத்தில் எம்மை விட்டு
பலியாடாய் ஆக்கிவிட்டு
போதுமடா சாமி என்று போவாய்
கனவிலும் பறைந்திருக்க மாட்டோமே.
தமிழீழம் தாங்கி நின்று
வழி காட்டி பாதை வெட்டி
வீரனாய் விழித்திருந்த தோழா எங்கே நீ!
வாராயோ ஒரு நிமிடம்
உன் குரல் தாராயோ ஒரு முறை
எமக்கான சேவகனே...
சென்ற இடம் சொல்லாமல் போனதேன்
இல்லை என்று தெரிந்தபின்னும்
இன்னும் தேறாத மனதோடு
தோழனே காத்திருக்கிறோம்
எங்கே நீ !!!