உன்னோடு நான் வாழ....
உயிரே எங்கே என்னைத் தேடுகிறாய்.
உன் உயிருக்குள்...உணர்வுக்குள்
கலந்தே காண்கின்றேன்
பார்...
ஊன் உருகித் தேடுகிறாய்
ரசிக்கிறேன் உன்னை நான்.
மலை அருவியாய் விழுகின்ற
சத்தத்தை வழிமறித்து
உச்சமாய்...
பாசத்தின் பரிதவிப்போடு
விழிக்கிறது உன் குரல் மட்டும்
காற்றலைகளில்.
உன் பாசமான
அன்புப் பாடல்களைத் தவிர
என் மனதிற்குள்
சந்தோஷப் பாடலகள் தர இங்கு
யாருமே இல்லை
எதுவுமே இல்லை.
வாழ்வின் அர்த்தத்தையே
தொலைத்துவிட்டு
ஏனோ தானோவாய்
நாட்களின் பின்னால் நானா
என் பின்னால் நாட்களா என்று
உருண்டோடிக் கொண்டிருக்கிறேன்.
உன்னோடு ஆத்மார்த்தமாக
அடங்கிக் கிடக்க நினைத்தாலும்
என் கனவுகள் யாவும்
விடை தெரியாமல் புதிராய்
கலைந்து புரியாமல் கிடக்கிறது.
இருண்டு விட்ட என் வானத்திற்குள்
வெளிச்சம் தர
எத்தனையோ போலி நட்சத்திரங்கள்.
அஞ்சி ஒதுங்கையில்
உன் மெல்லிய ஒளி மட்டுமே
என்னைத் தாண்டும் போது
உயிர் கலந்து
சலசலத்துப் போகிறது.
எம் அன்பு உண்மையென்றால்...
இறைவனும் அருள் தந்தால்...
உன்னோடு உயிர் கலந்து
உள்ளவரை வாழ்ந்துவிட,
என் உயிரும் உணர்வுகளும்
காத்திருக்கும்
காலம் முழுதும்!!!