விட்டுப்போன இடத்தில் இருந்தே
தொட்டுத் தொடர்கிறது என் உயிரின் தேடல்.
நாம் நடந்த அந்த நடை பாதை...
தெருக் கடந்துவர எமை நித்தம் வாழ்த்தி அனுப்பும்
கடலை விற்கும் வயதான கிழவி...
பாழடைந்த கிணற்றுக்குள் நிலவின் நிழல்...
ஒழுங்கை முந்தலில் வேம்பு வைரவர்...
பெருத்துக் கருத்த பூவரசு...
மனம் நிறைந்து நிறைக்கிறது உன்னை.
அறியவேயில்லை அந்த வயதில்
சாவோலை சொன்ன செய்தி
அதன் வலி சரியாகப் புரியவேயில்லை.
துக்கமாக...துயரமாக...பிரிவாக
இனிமேல் இல்லை என்கிற
ஏக்கமாக உணரவேயில்லை.
எனக்குள் இருள் அறவே இல்லை.
யார் யாரோவெல்லாம் அழுதார்கள்
நானும் அழுதேன்.
அப்பாவும் அம்மாவும் அணைத்திருந்தார்கள்.
நீ இனி இல்லை என்று
எனக்கு விளங்காமலே போனது.
ஆனால் இன்று வலிக்க வலிக்க
ஊழிக்காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறேன்.
நீ எனை விட்டுப் போன அந்தத் தினம்
இப்போ போலத்தான் இருக்கிறது.
ஒரு கொடுமையின் பேரழிவாய்
ஒரு பூகம்பத்தின் விழுங்கலாய்
என்னை அழுத்தி விழுத்துகிறது.
எனக்குள் அவஸ்தையில்லாமல்
அடிவயிற்றில் இருந்து வரும்
உருண்டை ஒன்று
நெஞ்சக்குழியை அடைக்கிறது.
என்னிடம் இல்லை என்று எதுவுமேயில்லை.
ஆனால் நீ இல்லாதது
என்னிடம் எதுவுமே இல்லாதது போல.
நீ என் வரமா...தவமா
நான் உன்னைப் புரிந்துகொள்ளும் முன்னமே
போய் வருகிறேன் என்று கூடச்
சொல்லாமலே போய் விட்டாய்.
காலங்களின் சுழற்சியால்
வரவாக செலவாக சுற்றிச் சுற்றி
நிறைய மாற்றங்கள்.
நீ மட்டும் வருவதாக இல்லை.
நினைவுகள் நரை கொண்டு விட்டாலும்
சில சமயம் இனி ஒரு முறை
உன்னைக் கண்டு கொண்டால்
கலைந்து போன என் கனவுகள்
மீண்டும் இளமை கொள்ளும்.
வானம் வெளிக்கும்.
வறண்ட பூமிக்குள்ளும் பசுமை தெரியும்.
பூக்களின் அழகில் புதுமை பிறக்கும்.
பசுக்களின் மடியில் பால் வழிந்து ஓடும்.
ஆமாம்....ஆமாம்
எல்லாமே இனி இனிமையாய் இருக்கும்.
ஆனால் என் உயிர் பிடுங்கிப்
போன நீ மட்டும் வருவதாகவே இல்லை.
ஆண்டுகள் பல பறந்து போன பிறகும்
பறித்துப் போன இடத்தில்
வெறித்து நின்றபடியே
என் உயிரைத் தேடியபடி நான்!!!