நீயும் தமிழன்தான்
நீ... என் சகோதரன்
நீ... என் உறவு
நீ... என் இனம்
நீயும் தமிழன்தான்
என்றாலும்...
நீ...ஒரு இந்தியன்!!!
நீ...உன்
நாட்டிலேயே
நிராகரிக்கப் பட்டிருக்கிறாயா...
உன் உயிர் காக்க
ஓடி ஒழிந்திருக்கிறாயா
அநுபவித்திருக்கிறாயா...
அகதி வாழ்வு.
இரத்தமும் சதையும்
தந்த பெற்ற தெய்வங்கள்
கண் முன்னே
இரத்தமாய் சதையாய்
சிதறிக் கிடந்தும்
இறுதிக் கிரியைகள்
செய்யக் கூட
கையாலாகாதவனாகி
உன் உயிர் காத்து
ஓடி ஒளித்திருக்கிறாயா!!!
சிதறிய உடல்களைக்
கிண்டிக் கிளறி
அப்பாடி.....
எவருமில்லை
என் வீட்டில் என்று
நின்மதிப் பெருமூச்சு
விட்டிருக்கிறாயா!!!
இறந்து கிடக்கும்
தாயின் உணர்வறியாப்
பச்சைக் குழந்தை
முலை பிடித்துப்
பால் குடிக்கும்
பரிதாபம்
பார்த்திருக்கிறாயா!!!
சொட்டு அசைந்தாலும்
"பட்"என்று
உன் தலையிலும் வெடி
விழுமென்று
இரத்த வெள்ளத்துள்
பிணத்தோடு பிணமாக
பாதி இரவு வரை
படுத்திருக்கிறாயா!!!
உயிரோடு புதைகுழிக்குள்...
கழுத்தில்லா முண்டங்கள்...
காணாமல் போனவர்கள்...
கற்பையும் பறித்துக் கொண்டு
கருவறைக்குள்ளும்
குண்டு வைத்துச்
சிதறடிக்க விட்டவர்கள்...
ஐயோ ஐயோ...
எத்தனை எத்தனை
கொடிய நச்சு விலங்குகள்
நடுவில் நாங்கள்
அகப்பட்டிருக்கும்
வேதனை அறிவாயா நீ!!!
இலங்கைத் தீவில்
தமிழனாய்ப் பிறந்த
பாவம் தவிர......
தவறு வேறொன்றும்
செய்யவேயில்லையே!!!
ம்ம்ம்.....
கேட்டு உணர்வதை விட
பட்டு உணர்வதே மேல்.
இருந்தும்...
புரிந்துகொள்
இனியாவது என்னை...
உன் தமிழ் சகோதரர்
நிலைமை அறிந்துகொள்.
நீயும் தமிழன்தான்
நீ...என் சகோதரன்
நீ...என் உறவு
நீ...என் இனம்
நீயும் தமிழன்தான்
என்றாலும்....
நீ ஒரு இந்தியன்!!!