இன்று ஓர் அழகின் பிறந்ததினம்.
அகத்தியக் கமண்டலத்துள்ளும்
அடக்கமுடியாச் சொற்களாய்
அவன் பெயர் அழகாய்.
தேரோட்டும் தலைவனாய்
தென் பொதிகைத் தமிழாய்
நெஞ்சுக்குள் பூத்து
அழகாய்த்தான் இருக்கிறான்.
தமிழ்த் தாயின் செல்ல மகன்
உணர்வை உழுதுகொண்டவன்
படுக்கைப் பாயைத்
தானும் சுவீகரித்த புன்னகையோடு.
அவன் முகமும் பால் மணமும்
தும்பியோடு
வண்ணத்துப் பூச்சியின் சிநேகமாய்.
சிந்திய சிரிப்போடு
மலர் கொய்யும் என் தலையில்
அவன் கரங்கள்
வீரப் புண்களின் வடுக்களோடு.
வேர் அறுந்து ஓடி வந்த அகதி நான்.
பிரபஞ்ச முட்டைக்குள்
என்னோடு தஞ்சம் கேட்டுத்
தானும் கம்பீரமாய்.
அழகே இன்னும் ஒருமுறை
பலமுறை
என் கண்ணுக்குள்
என் நெஞ்சுக்குள்
நான் படுக்கும் பாயில்
என் பூமியில்
பூத்தபடியே இரு.
நானும்...
தமிழ்ப்பறவைகளின்
வார்த்தைகளில்
வாழ்த்துக்கள் சேகரித்து
பாடியபடியே
சரிவேன் உன் மடியில் !!!