என் அழகானவனே
என்னோடு கை
கோர்த்துத் திரிந்த தெரு
அமைதியாய் தன் பாட்டில்.
கூடிக் கதைத்த கோடியில்
இப்போதும் தனிமையில் உனக்காக.
ம்ம்ம்...நீ பஞ்சு மெத்தையில்
எதிர்காலக் கனவுச் சிரிப்போடு
ஆழ்ந்த நித்திரையில்.
வாழ்வுக் கனவோடு
கனவுக் குழந்தையோடு
இறுகிய தரையோடு
கால்கள் புதைந்துவிட
விறைத்த மனதோடு
காத்திருக்கிறேன் வலியோடு.
பூத்துவிட்ட விழிகளை
மை தடவிக் குளிர்ச்சியாக்கி
தேடலின் நம்பிக்கையோடு
உள்ளத்துத் தீபத்தை
அணையாமல் பாதுகாத்தபடி.
இன்னுமே வரவில்லை.
வறுமைக் கல் எறிய
தூரச் சிதறிய என்னை
தேடிப் பொறுக்காதவனாய் நீ.
உனக்காகவே பாதுகாத்த
என் சிறகுகள்
முறிந்து சின்னாபின்னமாய்.
முன்னால் நிற்கிற
என்னைக் கண்டு கொள்ளாமலே
நீ முத்தமிடுகிறாய்
உன் புது மனைவிக்கு.
ஓ....நீ என்னைக்
கண்டு கொள்ள இயலாதோ!
மானுடக் கண்களின்
கருவிழிக்குள் சிக்காத
மாற்றுலகத்தின்
சிலந்தியோ நான்!
என் ஓலமோ அவலமோ
கேட்காத....கேட்க முடியாத
மனிதச் செவிடனோ நீ!
காற்றின் கனவளவுக்குள்
என் தேகம்.
புரிகிறதா...
போன வாரம்தான்
தூக்குப் போட்டுக்கொண்டு
இறந்துவிட்டேனாம் நான்!!!