தருணங்களைத் தாரை வார்த்துவிட்டு
ஒன்றுமே தெரியாதவன்போல்
அண்ணாந்து வானத்துத் தாரகைகளோடு
கதைபேசியபடி நீ.
பிறகு எதற்கு நான் உனக்கு.
கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
உன்னை நான்.
சொல்...முதலில் சொல்
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்.
ஒரு போதுமே சொன்னதில்லை
இத்தனை காலங்களில் ஒருமுறையாவது.
முத்தத்தின் சத்தத்தால்
என் அறை நிரப்பும் உனக்கு
என் செவிப்பறை புகுந்து
அன்பே என்று சொல்ல மட்டும்
தயக்கம் ஏன்?
அன்பின் ஆழச் சுவடுகளை
அதிகம் பதித்தவன் நீதான்.
முட்டி மோதி...முட்டி மோதி
மீண்டும் மீண்டும் முனையும் அலையாய்
மனதைத் தந்தவன் நீதானே!
கண்ணுக்குள் கண்டதில்லை உன் காதலை.
கடதாசியில் கண்டதில்லை உன் காதலை.
வார்த்தைகளில் பார்த்ததில்லை.
வரும் குறும் செய்திகளிலும் வருவதில்லை.
என்றபோதும்...நீ
என்னை விட்டு விலகியதும் இல்லை.
காதலின் மொழி தெரியாத
மூடனா நீ...முட்டாளா நீ.
அன்பே...
நீ மட்டும்
இதய இருட்டறைக்குள்
தனியாய் பேசிக்கொண்டால்
எட்டுமா என் செவிவரை.
இனியவனே சொல்.
இனியாவது சொல்.
என் செவியோடு ஒரு முறை சொல்.
நீயே என் இதயம் எனச் சொல்.
நீயே என் உயிரடி என்று சொல்.
சொல்லிவிடு என் செல்வமே.
இதயக் கூட்டைவிட்டு
என் பிராணன் பிரியும் முன்
சொல்லிவிடு.
பிரியமானவனே காத்திருக்கிறேன்.
காத்திருப்பின் அவகாசங்களும்
சில சமயம் தூரமாக முன்!!!